Wednesday 6 November 2013

அன்றிலும்.....மகன்றிலும் !

அன்றிலும்.....மகன்றிலும் !



”உறைந்தன மகன்றிலுடன் அன்றில் உயிர் ஒன்றி”

என்ற தன் ராமாயணப் பாடல் வரிகள் மூலமாக கம்பர்
’மகன்றில்’ மற்றும் ’அன்றில்’ ஆகிய இரண்டு வகை
பெடையை விட்டுப் பிரியாத பறவையினங்களைப்
பற்றி குறிப்பிடுகின்றார். மகன்றில் என்பது நீர்ப்பறவை
அன்றில் என்பது பனைமரத்தில் வாழும் பறவை. மழைக்
காலத்தில் தம் இணையை விட்டு நீங்காமல் தழுவிக்
கொள்ளும் தன்மையன இவை.



 Photo: அண்டில் !!

"நெருப்பின் அன்ன செந்தலை அன்றில் " என்று சங்க இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டக்  காலம் முதல் , ஜீன்ஸ் படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால் "அன்றில் பறவை ரெட்டைப் பிறவி  ; ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி ; பிரியாதே, விட்டுப் பிரியாதே  " என்று பாடப்பட்டக் காலம் வரை ....

ஏன் ?.... இன்றும் கூட கவிஞர்களால் ,எழுத்தாளர்களால் தொடர்ந்து புகழப்படும்  " அன்றில் " பறவையை, "அண்டில்"  
என்றே எங்கள் பகுதியில் உள்ள கிராமங்களில் அழைப்பது வழக்கம் !.

ஆங்கிலத்தில் ' Black Ibis ' என்று அழைக்கப்படும் அன்றில் பறவை கூரிய ,நீண்ட , வளைந்த அலகினை உடையது . எனவே 'அரிவாள் மூக்கன்' என்றும் அழைப்பார்கள் . இறக்கையின் மேல் வெண் திட்டினையும், தலையின் மேல் சிவப்பு நிறத் திட்டினையும் உடையது. 

பெரும்பாலும் பனை அல்லது தென்னை மரங்களின் மேலே வசிக்கும் ...விவசாய நேரங்களில் மருத நில வயல் வெளிகளில் கூட்டமாக மேயக் காணலாம் .

தன் இணை இறப்பின், தானும் இறந்து விடும் என்று கூறப்பட்டாலும் பறவையியலாளர்கள் இக் கருத்தினை ஏற்பது இல்லை ! இதற்கு இணையாக வட  மாநிலங்களில் காணப்படும்  ' Sarus Crane ' எனும் பறவையைக் குறிப்பிடுவார்கள் ...இந்தப் பறவை தன் இணையோடு ஆடும் நடனம் அவ்வளவு பிரசித்தம் !!

ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நினைவுக்கு வருகிறது ....

வேட்டையாடிகளால் அன்றில் பறவை இனம் அழிக்கப்படுவதைத்  தடுத்திடக் கோரி தொண்ணூறுகளின் இறுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான் சட்ட மன்றத்தில் வினா ஒன்று தொடுத்திருந்தேன் ...

சபாநாயகரால் என் வினா அனுமதிக்கப்பட்டு வழக்கப்படி சம்பந்தப்பட்ட வனத் துறைக்கு பதிலுக்காக அனுப்பி வைக்கப் பட்டது .

பேரவையில் கேள்வி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் படும் முன்னர், துறையில் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது ....திறந்து படித்தேன் .

' வக்கா '( Night Heron ) உள்ளிட்ட சில நீர்ப் பறவைகளைக் குறிப்பிட்டு அத்துடன் சங்க இலக்கியத்தில் புள்ளினம் ' எனும் கழக வெளியீடான திரு.சாமி அவர்களின் நூலில் இருந்து சில பகுதிகளையும்  இணைத்து , இதில் எந்தப் பறவை 'அன்றில் ' என்று நான்  தெரிவித்தால், அதை அவர்கள் எப்படிக் காப்பாற்றுகிறார்கள் என்பது  பற்றித் தெரிவிக்க வசதியாய் இருக்கும் என்று என்கிட்டயே திருப்பி கேள்வி கேட்டு அனுப்பி இருந்தார்கள் !!!! ;)

வேடிக்கை என்னவென்றால்,அதில் ஒன்று கூட 'அன்றில்' இல்லை !! ;)




No comments:

Post a Comment