Saturday 26 October 2013

விலையில்லா விஷயங்கள்...!



விலையில்லா விஷயங்கள் !


அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் வகை தொகை இல்லாமல் இலவச திட்டங்களை அறிவிப்பது நியாயமான மற்றும் நேர்மையான முறையில் தேர்தல்களை நடத்த இயலாமல செய்து விடும். இவற்றையும் அவர்களின் தேர்தல் அறிக்கைகளையும் முறைப்படுத்தக் கூடிய சட்டவிதிகள் எதுவும் தற்போது நடைமுறையில் இல்லாத சூழ்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் “

---உச்ச நீதிமன்றம் பரிந்துரை.



·         இலவசத் திட்டங்கள் மக்களின் வரிப்பணத்தின் மூலமாகவே நிறைவேற்றப்படுகின்றன. கட்சிகளோ அதன் தலைவர்களோ தங்கள் சொந்த பணத்தை இவற்றுக்காக செலவிடுவதில்லை. மக்களுக்கு இந்த புரிதல் வேண்டும்.

·         இலவசத் திட்டங்களை அறிவிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அவற்றின் பயனாளிகளின் நிலை பரிதாபகரமாகவே உள்ளது, எண்ணிக்கையும் பல கோடிகளாக உள்ளது என்பது மறுக்க முடியாத நிதர்சனம்.

·         இந்திய அரசியல் கட்சிகளும் மக்களை தொடர்ந்து இலவசங்களுக்காக ஏங்கும் நிலையில் வைத்திருக்கவே விரும்புகின்றன. மீனைக் கொடுகிறார்களே தவிர மீன் பிடிக்க கற்றுத் தருவதில்லை.

·         தேர்தல் அறிக்கையில் அவர்கள் வெளியிடும் இலவசத் திட்டங்களுக்கான மொத்த செலவு மதிப்பீடு எவ்வளவு அதற்கான நிதியை அவர்கள் எவ்வாறு திரட்டப் போகிறார்கள் என்பதையும் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும். (தங்களை கசக்கிப் பிழிந்து எடுத்தச் சாற்றில் ஒரு பகுதியைத் தான் இலவசம் என்ற பெயரில் தங்களுக்கே குடிக்க கொடுக்கிறார்கள் என்பது அப்போது அப்பாவி மக்களுக்கு புலப்படும்)

·         தேர்தலுக்குப் பிந்தைய இலசத் திட்ட அமலாக்கம் என்பது தான் மிக முக்கியமான கட்டமாகும். பொருட்களை வாங்கும் முறை, விலை, தரம், பயனாளிகள் தேர்வு அவர்களுக்கு வழங்கும் முறை ஆகியனவே மிக முக்கியமாக கண்காணிக்கப் படவேண்டிய அம்சங்களாகும். ஆனால், தேர்தல் கமிஷன் இதில் எந்த அளவிற்கு தலையீடு செய்ய இயலும் என்பது விவாத்த்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயங்களாகும்.

தேர்தலின் போது கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்படும் இலவச திட்டங்களுக்கும் இதர காலங்களில் அறிவிக்கப்படும் இலவச திட்டங்களுக்குமான வித்தியாசம் அங்கீகரிக்கப்பட வேண்டும். மக்களின் வரிப்பணத்தை கொண்டு செயல் படுத்தப்படக் கூடியதொரு சூழலில், இந்தியா போன்றதொரு வளரும் ஜனநாயகத்தில் ‘இலவசம்என்பது ஒரு இழிவான, கேவலமான செயல் என்று எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதே சமயத்தில், இந்திய மக்களை இலவசங்களை மறுத்து தங்கள் சொந்தகாலில் நிற்கக் கூடியவர்களாக மாற்ற வேண்டிய தலையாய கடமை தங்களுக்கு உள்ளது என்பதை இந்திய அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment